Sunday, January 9, 2011

பதிவர்களே நீங்கள் செய்வது சரியா?

எத்தனையோ சினிமாக்களை ஆங்கிலப்படத்தின், ரஷ்யப்படத்தின் "காப்பி" "உல்டா" என்று வரிந்துகட்டிக்கொண்டு விமர்சிக்கும் சில வலைப்பதிவர்கள் உள்ளனர். ஆனால் வலைப்பதிவர்களில் அப்படி காப்பி அடித்து தன்னுடைய பதிவு போல் போட்டுக்கொள்ளும் சில பதிவர்களைப்பற்றி யாருமே எழுதுவது இல்லை. ஏன்? நந்தலாலா படத்தை காப்பி, என்று வலையுலகத்தில் அனைவரும் கிழிகிழி என்று கிழித்து தொங்கவிட்டனர். மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல். அப்படி வலைப்பதிவர்கள அதை கிழிகிழி என்று தொங்கவிட்டதற்கு பின்தான் மிஷ்கின் அந்தப்படத்தை கிகுஜிரோ படத்தின் தழுவல் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத்தொடங்கினார். ஆனாலும் நம் பதிவர்கள் அவரை சும்மாவிடவில்லை. ஏன் அந்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்து ஒரு டைட்டில் கார்ட் கூட போடவில்லை என்று கேட்டு தோண்டி துருவி கிழங்கெடுத்தனர். மிகச்சரியான கேள்வியே.



தவறுகள் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்டு பதிவெழுதும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுலகிலேயே இதுபோல் சிலர் நடந்துகொள்வதை தட்டிகேட்டு எழுதுவதில்லை? இதோ அப்படி நிழந்த ஒரு பதிவரின் தவறான போக்கு.. சமீபகாலத்தில் இந்திராவின் கிறுக்கல்கள் என்ற பெயரில் ஒரு பதிவர் எழுதிவருகிறார். அவர் சமீபத்தில் புறக்கணிப்பின் வெறுமை  என்ற பெயரில் ஒரு பதிவிட்டுள்ளார். ஆனால் உண்மையில் இந்தப்பதிவு அவருடையது இல்லை


இந்தக்கவிதை அவரால் எழுதப்பட்டது இல்லை. சல்மா என்ற மிகப்பிரபலமான கவிஞர் அவர்களின் கவிதைத்தொகுப்பான ஒரு மாலையும் இன்னொரு மாலையும் என்ற கவிதைத்தொகுப்பில் இருந்த "இவ்விடம்"  என்ற  கவிதையை எடுத்து எழுதி இருக்கிறார். இதோ அந்த கவிதைக்கான லிங்க்..

இந்தக்கவிதையை தானே எழுதியது போல் தன்னுடைய வலைத்தளத்தில் இந்திரா அவர்கள் பதிவிட்டுள்ளார்கள். இந்த கவிதைக்கு முப்பதிற்கும் மேற்பட்ட பதிவர்கள் வாவ் அருமை என்று பாராட்டு மழை வேறு. ஒரு கவிதையை யார் எழுதியது என்று கூட தெரிந்துகொள்ளாமல் பாராட்டும் பதிவர்களின் மனப்போக்கை என்னவென்று சொல்வது?


இதுபரவாயில்லை.. குட்டி குட்டி கவிதைகள் என்ற பெயரில் சில கவிதைகளை இவர் பதிவிட்டுள்ளார். அந்த அத்தனை குட்டிகவிதைகளும் சல்மாவின் வலைத்தளத்தில் இருந்து எடுத்தாளப்பட்டதே. மிக புத்திசாலித்தனமாக ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு தொகுப்பில் இருந்து எடுத்து பதிவிட்டுள்ளார்

இதோ அந்த குட்டி குட்டி கவிதைகள் எடுக்கப்பட்ட கவிஞர் சல்மாவின் லிங்க்
லிங்க் 1

லிங்க் 2




இந்தப்பதிவில் கவிஞர் சல்மாவுக்கு நன்றி என்று எங்கேயும் இவர் பதிவிடவில்லை. ஆனால் ஒரு புத்திசாலித்தனமாக அந்த கவிதையின் லேபிளில் "படித்ததில் பிடித்தது" என்ற ஒரு வார்த்தையை சேர்த்துக்கொண்டுள்ளார். ஆனால் இந்த விஷயத்தை படித்தவர்கள் யாருமே கவனிக்கவில்லை.. அந்த குட்டிகுட்டி கவிதைகளை பாராட்டி பக்கம் பக்கமாக கமெண்டுகள் வேறு.. ஆனால் அந்தப்பதிவரே, ஒரு இடத்தில் கூட இது என்கவிதை இல்லை என்ற வார்த்தையை கூறவில்லை.. இவரது மற்ற பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டால் எல்லா பின்னூட்டத்திற்கும் விளக்கமாக பதில் பின்னூட்டமிடுவார். ஆனால் இந்தக்கவிதையை இவர் எழுதியது என்று நினைத்து பின்னூட்டமிடும் வாசகர்களுக்கு ஒரு வார்த்தை கூட நன்றி சொல்ல மாட்டார். ஏனென்றால அதுதான் அவரது கவிதையே இல்லையே. இந்தக் கவிதையிலாவது படித்ததில் பிடித்தது என்று லேபிளிட்டுள்ளார். ஆனால் புறக்கணிப்பின் வெறுமை என்ற கவிதையில் தானே கிறுக்கியதாக லேபிளிட்டுளார். இதை எந்தப்பதிவரும் ஏன் கவனிக்கவில்லை. மிஷ்கின் இன்னொரு படைப்பை தழுவி எடுத்ததற்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை. என்று குமுறிய பதிவர்கள், இப்போது எங்கே போனார்கள்?

நேற்று ஒரு பதிவில் இது தான் சிந்தித்தது அல்ல என்று என்று குறிப்பிடிருக்கும் இந்திரா அவர்கள், ஏன் இதற்கு முந்தைய பதிவுகளான புறக்கணிப்பின் வெறுமை, குட்டி குட்டி கவிதைகள் போன்றவற்றில் இதைக்குறிப்பிடவில்லை? பதில் சொல்வாரா?


இனி தவறுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படும்....